சென்னை: கரோனா தொற்று பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கோயம்பேடு பழச் சந்தையில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவை பின்பற்றி வணிகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியே வருவது குறைந்துள்ளதால், தங்களது வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு பழ சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர். இது குறித்துப் பேசிய வியாபாரி பிரகாஷ், "முதல் ஊரடங்குக்குப் பிறகு தொழில் தற்போதுதான் நல்ல நிலைக்கு வந்தது. மீண்டும் தொற்று அதிகரிப்பதால் வியாபாரம் நடைபெறவில்லை. தற்போது மாம்பழ சீசன், ஆனால் மாம்பழங்கள் பெரிய அளவுக்கு வரத்து வருவதில்லை. சரக்குகள் வந்தாலும் விற்பனையாவதில்லை.
நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்கூட வியாபாரம் நடைபெறவில்லை. இயல்பான வியாபாரத்தில் 25 விழுக்காடுதான் நடைபெறுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு விலை பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார்.
கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், "கரோனா தொற்று பாதிப்பால் 25 விழுக்காடுதான் வியாபாரம் நடைபெறுகிறது. தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கி வருகிறோம். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கோயம்பேடு மலர் சந்தைக்கு ஞாயிறு அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கில் பழச் சந்தை வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சரக்குகள் இரவு நேரத்தில் மட்டுமே வரும். அவை காலையில் வந்தால் பெரிய அளவில் கூட்டநெரிசல் ஏற்படும். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து கரோனா தொற்று பாதிப்புக்கு காரணமாக அமையும்" என்று கூறினார்.
சந்தையை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு பழ வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இரவு நேர ஊடரங்கால் தேவையில்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர்கள், இது தொடர்பாக நாளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் சந்தை நிர்வாக குழு அலுவலர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!