சென்னை மாதவரத்தில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ஆனந்தகணேஷ் (39) திருடிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், திருடி சென்ற லாரியில் டீசல் இல்லாததால், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாலையோரத்தில் இருந்த ஓட்டுநர்களிடம், “நான் லாரி ஓட்டிக் கொண்டு வரும்பொழுது நடு வழியில் திருடர்கள் என்னை அடித்து பணத்தை பறித்து சென்றுவிட்டார்கள்” எனக் கூறி, ரூபாய் 700 வாங்கிக்கொண்டு டீசல் நிரப்பியுள்ளார்.
ஆனந்த கணேஷிடம் பணம் கொடுத்தவர்கள், லாரியில் இருந்த லாரியின் உரிமையாளரின் தொலைபேசி எண்ணை கிரீஸ் மூலம் அளிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, சிறிது சந்தேகம் கொண்டனர். பின் அவர்கள் லாரி பின்னே சென்று, ஆனந்த் கணேசை மது அருந்த கூப்பிட்டு சென்றுள்ளனர்.
மது அருந்தும் நேரத்தில், அவருக்கு பணம் அளித்தவர்கள், லாரியில் அழிக்கப்பட்டிருந்த உரிமையாளர் நம்பருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, இரண்டு நாள்களுக்கு முன்பு லாரி தொலைந்து விட்டதாகவும், அவரைப் பிடித்து வைக்குமாறும் கூறியுள்ளார்.
இதனைக் கவனித்த ஆனந்த் கணேஷ் லாரியை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஆனந்த் கணேஷிடம் டீசலுக்கு பணம் கொடுத்தவர்கள் பின்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடியில் இருக்கும் காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், அவரை சுங்கச்சாவடி அருகே மடக்கிப்பிடித்து மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மரக்காணம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல நூறு கோடி மோசடி செய்த வின்ஸ்டார் சிவகுமார் அதிரடி கைது!