சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களைத் தேடி மருத்துவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தொற்றா நோய்களினால் ஏற்படும் நோய்ப் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக மக்களைத் தேடி மருத்துவம் வடிவமைக்கப்பட்டு, களப் பணியாளர்கள் மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகளை இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி வரை, 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பயனாளிகள், சேவைகள் பெற்று பயனடைந்துள்ளனர். இது தவிர 42 லட்சத்து 77 ஆயிரத்து 703 பேர் திட்டத்தின் கீழ் தொடர் சேவைகளைப் பெற்றுள்ளனர்.
உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 19 லட்சத்து 76 ஆயிரத்து 534 பேரும், நீரிழிவு சிகிச்சைக்கான மருந்துகளை 13 லட்சத்து 51 ஆயிரத்து 850 பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 9 லட்சத்து 99 ஆயிரத்து 28 பேரும், நோய் ஆதரவு சிகிச்சை சேவைகளை 1 லட்சத்து 78 ஆயிரத்து 5 பேரும், இயன்முறை சிகிச்சை சேவைகளை 3 லட்சத்து 43 ஆயிரத்து 575 பேரும், சிறுநீரக நோய்க்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை 1221 பேரும் பெற்றுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.