புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த 12 மணி நேரத்திற்கு மேலாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் அருகில் நீடித்து வருகின்றது. இது நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து கேரளா நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கரணை, வேளச்சேரி, கே.கே.நகர், ஆழ்வார்பேட்டை, போயஸ் தோட்டம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஆழ்வார்பேட்டை பகுதிகளில் பல்வேறு சாலைகளில் மழை நீர் ஒரு கிமீ தூரத்திற்கு தேங்கியிருந்தது.
மாநகராட்சி நிர்வாகம், மழை நீரை நீக்க தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், மழை நீர் வடிகாலை சரியாக பராமரிக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.