சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இன்று பேசிய மு.க. ஸ்டாலின், "1987ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்படும்.
சமூகநீதி கொள்கையின் தாய்மொழியாக விளங்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. வகுப்புரிமை, சாதி ரீதியான இடஒதுக்கீடு என எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் சமூகநீதி என்னும் ஒற்றைச்சொல்லைக் கொடுக்கும். அத்தகைய சமூகநீதிக் கொள்கை கொண்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம்
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொடையாக வழங்கியது திராவிட இயக்கம். சுதந்திர இந்தியாவில் அதற்குச் சட்டரீதியான இடர்ப்பாடு வந்தபோது பெரியாரும், அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்து இட ஒதுக்கீட்டைக் காத்தனர்.
காமராஜர் அன்றைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்திய காரணத்தினால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சமூகநீதியை அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடி இனத்தவருக்கு இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது.
சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வட தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய போராட்டத்தில் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.
உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம்
அவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் 1989ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவை அமைத்துக் கொடுத்து 20 விழுக்காடு வழங்கி கல்வி வேலைவாய்ப்பில் சம அந்தஸ்தை ஏற்படுத்தியது.
முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துக் கொடுத்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டமுறையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளின் தியாகத்தைப் போற்றும்வகையில் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.
வாரிசுகளுக்கு அரசுப்பணி
அந்த வாக்குறுதியை யார் மறந்தாலும் நான் மறக்கவில்லை. சொன்னபடியே விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீட்டு போராட்டத்தின்போது உயிர்நீத்த தியாகிகளுக்கு நான்கு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த 21 தியாகிகளின் குடும்பத்திற்கு அப்போதே மூன்று லட்சம் ரூபாய் கருணாநிதி அரசு வழங்கியது. அதுமட்டுமில்லாமல் மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பம்பர் டூ பம்பர் காப்பீடு வழக்கு ஒத்திவைப்பு