சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புயல் நள்ளிரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மையத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளிடம் தலைமைச்செயலாளர் கேட்டறிந்தார். பின்னர் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அம்மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் முழு வீச்சில் செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உடன் இருந்தார்.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல் தாக்கம் - சென்னை கடற்கரைகளில் கடல் சீற்றம்