சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனைக் கடந்த ஒரு வார காலமாக அகற்றும் பணியில் காவல் துறையினர் உதவியோடு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத்தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று (மே 08) ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணையா (55) என்பவர், அவரின் வீட்டை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினர், அரசு அலுவலர்களின் வாகனங்கள் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பிற்காக காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எங்களுக்கு ஓட்டுப்போடுங்க பட்டா தர்றோம்னு சொன்னாங்க... இப்போ, எங்களை துன்புறுத்திட்டாங்க..'