சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சசிகுமார் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றும் கவிதா என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கான வட்டியாக மாதம் 9 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அசல் பணம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கரோனா பேரிடர் காரணமாக சில மாதங்களாக சசிகுமார் வட்டி கட்டவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிதா பெரவள்ளுர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்துப் பேசியபோது அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடுவதாக முடிவெடுத்ததை அடுத்து, அவர்களிடம் இருந்து காவல் துறையினர் எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.
இருப்பினும் கவிதா இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் சசிகுமாரை காவல்நிலையம் அழைத்து வந்து தாக்கி 6 லட்ச ரூபாய் கடன் பெற்றதாக எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சசிகுமார் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சசிகுமாரின் குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிக்குமாரின் மனைவி வனிதா திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன் கணவரை தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.