சென்னையை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ. 24) முரளி கிருஷ்ணாவுடன் ஒருவர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை செல்லும் புறநகர் ரயிலில் முரளி கிருஷ்ணாவும், தகராறில் ஈடுபட்ட அந்த நபரும் ஒன்றாக பயணித்த நிலையில், ரயிலுக்குள் வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, ஓடிக்கொண்டிருந்த ரயிலில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவைச் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே முரளி கிருஷ்ணா உயிரிழந்து உள்ளார். அதையடுத்து, கொலை செய்த நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இந்நிலையில், கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற அவரை, பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட முரளி கிருஷ்ணாவின் பெரியப்பா மகன் தான் அவர் என்பது தெரியவந்தது. அவரின் பெயர் ரவீந்திரன் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். மேலும், இருவரும் உறவினர்கள் என்பதால், இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இதில், முரளி கிருஷ்ணாவை கொலை செய்யும் நோக்கத்துடன் இருந்த ரவீந்திரன், திட்டமிட்டு கத்தியுடன் ரயிலுக்குள் ஏறி, ஓடும் ரயிலில் வைத்து முரளி கிருஷ்ணாவை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!