சென்னை: வளசரவாக்கம் பழனி நகரை சேர்ந்தவர் ஹரிதா ராஜேஷ்வரி . இவர் வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி ஹரிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஹரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த ஹரிதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி சைபர் ஆய்வக கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஹரிதாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால், அதை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், ஹரிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரும்பாக்கத்தை சேர்ந்த மதுமோகன் (35) என்பவரை காதலித்து வந்ததும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஹரிதாவிடம் உடலுறவு வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.
இதனால், ஹரிதா கருவுற்றிருக்கிறார். இதையடுத்து, மதுமோகன் ஹரிதாவுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்து கருவை கலைத்துவிட்டு, பின்னர் செல்போனில் பிளாக் செய்து தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால், மனமுடைந்த ஹரிதா தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் மதுமோகன் மீது தற்கொலைக்கு தூண்டுதல், விருப்பமில்லாத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் (ஆக. 12) கைது செய்தனர்.
மதுமோகனிடம் நடத்திய விசாரணையில், அவர் டிரேடிங் தொழில் செய்து வருவதும், வெளிநாட்டில் தான் எடுத்த புகைப்படங்களை வைத்து பெண்களை காதல் வலையில் விழ வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.
மதுமோகன் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி, பின் செல்போனில் பிளாக் செய்து தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுமோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியிடம் தகாத முறையில் நடந்த கும்பல்... தட்டிக் கேட்ட கணவருக்கு அடி உதை... வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி...