விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சித்தேரிகரை சாலாமேடு லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைக்குறவர் சமூகத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களது, பிள்ளைகள் கல்வி கற்க சாதிச்சான்றிதழ் அவசிமாக இருக்கிறது. ஆனால், கடந்த 7ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் இச்சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் சேர்க்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமாணவிகளை சேர்க்க முயன்றபோது, அங்கு சாதி சான்றிதழ் இல்லாமல் அனுமதிக்கப்படமாட்டாது எனக்கூறிய நிலையில் பள்ளி வாசலில் அந்த ஆறு மாணவிகள் இந்து மலைக்குறவன் என சாதிச் சான்றிதழ் வழங்கிட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் காந்திசலை அருகே கிழக்கு புதுவை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடமுயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். மேலும், சாதிச்சான்றிதழ் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சாதிச்சான்றிதழ் இல்லாமல் உயர்கல்வி பயில அல்லல்படும் மாணவர்கள்...!