சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடகப்பட்டு செப்டம்பர் நான்காம் தேதி வரையில், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 77 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் ஒரு லட்சத்து 303 நபர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் 68 ஆயிரத்து 143 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
மேலும், 10 ஆயிரத்து 516 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 10 ஆயிரத்து 927 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 33 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் மொத்தம் மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 999 பயனாளிகள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ’நிபா வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்’ - சுகாதார செயலர்