முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், “மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் 2017-2018ஆம் நிதியாண்டில் அதிமுக பிரமுகர்களும், அச்சங்கத்தின் நிர்வாகிகளுமான தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் உள்ளிட்டோர் சுமார் 7 கோடியே 92 லட்சத்து 41 ஆயிரத்து 616 ரூபாய் (சுமார் எட்டு கோடி ரூபாய்) அளவுக்கு கையாடல் செய்தது தணிக்கையில் தெரியவந்தது.
மோசடி செய்யப்பட்ட தொகையை உரியவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என தணிக்கைத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டு மூன்றாண்டுகளாகியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் தவறிழைத்தவர்கள் அப்பொறுப்புகளில் இன்றளவும் சுதந்திரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின், லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகள் இல்லாமல் சிறப்புற செயல்பட வேண்டும். ஆவினின் முதுகெலும்பாகத் திகழும் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்தின் ஊழியர்கள், பால் முகவர்களின் உழைப்பு வீணாகக் கூடாது. ஆகவே, மோசடி செய்தவர்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர்களுக்கு வட்டியோடு திருப்பி வழங்க வேண்டும் என கடந்த ஜூன் 9ஆம் தேதி அரசிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.
இந்நிலையில், மோசடி செய்த விவகாரத்தில் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மீது மட்டுமே தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது ஆதரவாளர்களாக இருப்பதால் அச்சங்கத்தின் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் ஆகியோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கடும் அதிர்ச்சியளிக்கிறது. அம்பை எய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் அம்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர்கள் இருவரையும் காப்பாற்றிட ஆட்சியாளர்கள் துணை போகின்றனரோ, என்கிற சந்தேகமும் எழுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது துணைத் தலைவராக இருக்கும் பரமானந்தத்தின் அண்ணன் பழனிச்சாமி சங்கத்தில் ஏற்கனவே தலைவராக இருந்தவர். அவரும் தலைவராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மேற்குறிப்பிட்ட அனைவரது மீதும், அவர்களுக்கு துணைபோன அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களைத் தண்டித்து, ஆவின் நிறுவனத்தை அழிவிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடி மோசடி - இருவர் கைது