சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டம் மூலம் பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், முதல் பட்டதாரி மாணவர்கள் ஆகியோருக்கு இலவசமாக இணைப்புக் கல்லூரிகளில் கல்வி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விண்ணப்பம் செய்த மாணவர்களில் தகுதியான மாணவர்கள் இலவச கல்வி திட்டத்தில் சேர்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தின்கீழ் 2023-2024ம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் இணைப்பு கல்லூரிகளில் 218 மாணவர்கள் பயில்வதற்கான ஆணையை சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கௌரி, 'சென்னை பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் வறுமையினாலும், இயலாமையினாலும் உயர் கல்வி படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு உதவி செய்யும் விதமாக இலவச கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண்கள் அடிப்படையிலும், பொருளாதாரம், குடும்ப பின்னணி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசிடம் சிறப்பு நிதி கேட்டுள்ளோம். தொலைதூரக் கல்வியில் மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் திட்டத்திற்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் முதல் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு நிதி வருவாய் இருக்கும். சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அட்சயப் பாத்திரமாக தொலைதூரக் கல்வித்திட்டம் இருந்து வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வியில் 14 பாடப்பிரிவிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம், ஆன்லைன் வகுப்பிற்குக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியின் மூலம் பி.எட் (B.Ed) பாடம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தான் வடிவமைத்துள்ளது. சென்னை பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முதுகலைப் பாடப்பிரிவிற்கான பாடங்களை மட்டுமே வடிவமைக்கும். சென்னை பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் மெல்போர்னியா (Melbourne) பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளங்கலை பட்டப் படிப்பினை முதல்முறையாக படித்து வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழக முதுநிலைப் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி கட்டணத்திலும் மாற்றம் இல்லை" என துணைவேந்தர் கௌரி தெரிவித்தார். மேலும், இலவச கல்வித் திட்டத்தில் தங்களுக்கு இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தங்களின் பெற்றோர்களின் சுமையை குறைக்க முடிந்துள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!