கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உலக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு அவசர ஆய்வு தேவைப்படுவதாகவும், இதற்கு முன் நாம் பார்த்திராத, எந்த ஒரு மருத்துவத் தீர்வும் இல்லாத இந்த நோய் மனித இனத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றாகக் கூடாமல் இருப்பது கடினமாக இருந்தாலும், இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் தேவைப்படுவதாகத் தெரவித்துள்ளார்.
கூட்டமாக இல்லாமல் இருப்பதும், பிறரிடம் இருந்து தள்ளியிருப்பதும் தான் இதற்குத் தீர்வு என்பதால் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், பார்வையாளர்கள் என யாரும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இது நம்மை மட்டுமல்லாது மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டியது என்றும், இத்தகைய நெருக்கடி சமூகத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதை ஒற்றுமையுடன் அனைவரும் கடமையாக ஏற்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரசால் சட்டமன்றத்தை ஒத்திவைக்கத்தேவையில்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!