சென்னை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரியும், அதுவரை வாக்கு எண்ணிக்கையைக் கோவையில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும்,
மேலும், கோவை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகுபாடில்லாமல் அனைத்துக் கட்சியினரும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்களைக் கொடுத்ததாகவும், தேர்தல் ஆணையத்தில் பணப்பட்டுவாடா? குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவுசெய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்குத் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. அதே வேளையில் கோவை மாவட்டத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
