சென்னை: கோயம்புத்தூர், விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசின் உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை வருவாய் கோட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அவரது வாரிசுகள் சிவராஜ், பாலாஜி, கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலத்தை மீட்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் மீட்கப்பட்டதாகவும், அதன் பின்னர் நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்தததாகவும் குறிப்பிடப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு நிலத்தில் சட்ட விரோதமாக குடியிருந்தவர்கள், மற்றவர்களின் பெயருக்கு மாற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சட்ட விரோதமாக நில அபகரிப்பில் ஈடுபட்டு, மோசடியாக பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். நிலத்தில் சட்ட விரோதமாக குடியிருந்தவர்கள், அதன் பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
திட்டமிட்டு நிலத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, பொது ஊழியர் என்கிற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை நிலத்தையும், கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். சட்ட விரோதமாக குடியிருப்போரை நான்கு வாரங்களில் அப்புறப்படுத்தி, அது குறித்த அறிக்கையை நவம்பர் 4ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தால் பறிபோன உயிர்? கடனை கட்ட தாமதமானதால் நிதி நிறுவனம் மிரட்டலா? பெண்ணின் தற்கொலையில் நடந்தது என்ன?