சென்னை : சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு தில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிப்பதாகக் கூறி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விருது வழங்கும் விழாவை நடத்தியது.
இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்திநராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளித்தனர். அவற்றில் நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ், மகாராஜன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவிகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதையறிந்த ராஜூ ஹரிஷ் தலைமறைவானார்.
மேலும் போலி ஆவணங்களை காட்டி நிகழ்ச்சி நடத்த முறைகேடாக அனுமதி பெற்றதாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் அளித்த புகாரில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மகாராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நுழைந்து மினி விசாரணை நடத்தினால், காவல்துறை நடத்தும் விசாரணையில் தலையிடும் வகையில் மாறிவிடும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
அதேசமயம் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரில் பதிவான வழக்கில் காவல்துறை விசாரணையை தொடரலாம் என்றும், மூன்று மாதத்தில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க :கரோனா சிகிச்சைக்கான தொகையை தராத தனியார் நிறுவனம்; 73 வயது முதியவருக்கு ரூ.25,000 வழங்க உத்தரவு!