சென்னை: திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் என்கிற ஊரில் சோழீஸ்வரர் கோயில், அழகுராய பெருமாள் கோயில், செல்லாண்டி அம்மன் கோயில் ஆகியவை ராஜேந்திர சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்.
இந்த கோயிலின் அறங்காவலர்களாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த மூவர் 1974ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இந்த கோயில்களின் சில சொத்துக்களில் கோயிலின் பெயருக்கு முன் குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சேர்த்து அரசு ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோயிலின் சொத்து ஆவணங்களில் கோயிலின் பெயருக்கு முன்னால், விழியன்குல கொங்குநாட்டு வெள்ளாளர் என சேர்த்து 1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தமிழ்நாடு செட்டில்மெண்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கோயிலின் பெயரில் மட்டும் ஆவணங்களை மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோயிலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே அறங்காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அறங்காவலர் என்கிற பெயரில் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது "பொதுக் கோயில்" என்கிற தன்மையை மாற்ற முடியாது என தெளிவுபடுத்தினார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான, தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் பெயருக்கு முன்னால், குறிப்பிட்ட சாதிப் பெயரை சேர்ப்பது என்பது தவறாக புரிந்து கொள்ளும் சூழலை உருவாக்கும் என சுட்டிக் காட்டினார். எனவே, கோயிலின் சொத்து ஆவணங்களில், அதன் பெயருக்கு முன்னால் உள்ள சாதிப் பெயரைச் சேர்த்த செட்டில்மெண்ட் அதிகாரியின் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார். மேலும், சொத்து ஆவணங்களில் கோயில் பெயர் மட்டுமே இடம் பெறும் வகையிலான நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!