சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது.
இந்த பட்டியலை ரத்து செய்து, தங்களை கலந்தாய்வில் அனுமதித்து மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு வழங்கக் கோரி ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டதாலும், குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறாததாலும் இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் சரி பார்க்கப்பட்டனவா? என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, மனுதாரர்கள் ஏழு பேரின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அடுத்த கல்வியாண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சரி பார்க்க வேண்டும் என மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் மனுதாரர்கள் ஏழு பேரில் இருவருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கிடைத்துவிட்டதால் வழக்கை வலியுறுத்தவில்லை என இரு விண்ணப்பதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஐந்து பேரில், போலி சான்று அளித்த இருவரின் விண்ணப்பங்களையும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஒருவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்தது சரி என உத்தரவிட்ட நீதிபதி, மேலும் இருவரையும் சேர்த்து கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் கேம் தடை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனு வாபஸ் - ஏன்?