சென்னை: பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் அப்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடும், தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே, பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு, நீதிபதிகள் துரைசாமி, நீதிபதி தமிழ்செல்வி அமர்வு முன்பு இன்று (ஏப்.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது சபரீசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றும் எனவே வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பிரதமராகவே செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்' - ஆளூர் ஷா நவாஸ் புகழாரம்