சென்னை: திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்து வருகிறார். அவர் பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால், அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்தியத்தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் தனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (மே.31) பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும்; அதுவும் இந்தியாவை விட்டுச்செல்ல வேண்டிய நிலையிருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் இந்தியத் தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.