திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இரு முறை அவகாசம் வழங்கிய பிறகும் ஆணையத்தின் நோட்டீஸ் மீது திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால், காவல் கண்காணிப்பாளர் சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படுத்தும்படி தென் மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டு, சரவணன் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சரவணன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு பதிலாக கூடுதல் எஸ்பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி இருந்ததாகவும் தெரிவித்த அவர், முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எஸ்.பி சரவணணுக்கு எதிரான கைது உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்
இதையும் படிங்க: Tax on Taj: வீட்டு வரி செலுத்தாததால் தாஜ்மஹாலுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்!