சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் கோவில் விவகாரத்தில் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அரசு நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
அறநிலையத்துறை தரப்பில், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆறுகால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அரசுக்கும் பொது தீட்சிதர்களுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது? கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர் என்பதால் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் கோவிலில் கனகசபையில் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்பதை தீட்சிதர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்கு தீட்சிதர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு ஏன் தலையிட போகிறது? நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்ததால்தான் அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அப்போது குறிப்பிட்ட இந்து சமய அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், தீட்சிதர்கள் சுய ஒழுங்குமுறையுடன் செயல்பட வேண்டும் என்றும், கோவிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஆறு கால பூஜை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கனகசபையில் பக்தர்களை எப்படி அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிப்பது? என்பது குறித்த வழிமுறைகளுடன் திட்டத்தை வகுத்து நவம்பர் 14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதர்கள் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.