சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி அண்டை வீட்டில் தென்னை மரம் வளர்க்கப்படுவதாகவும், அதிலிருந்து தேங்காய் விழுவதால் தமது வீட்டின் மேற்கூரை சேதமடைவதாகக் கூறியுள்ளார்.
அடிக்கடி மேற்கூரை சேதமடைவதால் தமக்கு மன உளைச்சல் ஏற்படுவதால், தென்னை மரத்தை அகற்றக்கோரி அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி, தென்னை மரத்தை அகற்றக் கடந்தாண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் வருவாய் அதிகாரி உத்தரவுப்படி தென்னை மரம் அகற்றப்படவில்லை என்பதால் மரத்தை அகற்ற டி.ஸ்பி-க்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்கும்படி தென்னை மரம் வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான கலியமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய போதும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தென்னை மரத்தை வெட்டி அகற்றுமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். தமது சொத்தை பாதுகாக்க மனுதாரருக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, வெட்டப்படும் தென்னை மரத்திற்குப் பதிலாகக் கொய்யா மரம் வைக்க வேண்டுமெனவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாடு வருகை: தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை!