சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் கடந்தாண்டு ஜனவரி 18ஆம் தேதி நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்தநிலையில், இவர்களை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு அரசு இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அத்துடன் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்களை வரவேற்க ஆணைய செயலாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆணைய உறுப்பினராக பணியாற்றும் சரண்யா ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், "குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரியக் காரணங்கள் இல்லாமல் உறுப்பினர்களை நீக்க முடியாது. புதிய நியமனங்கள் செய்யமுடியாது. எனவே தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தமிழ்நாடு அரசின் அரசாணைக்கும், புதிய தலைவர், உறுப்பினர் தேர்வு செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.