சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற மாநகராட்சியின் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜரானார்.
அப்போது வாதிட்ட அவர், இந்த விவாகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாகவும், கொடிக்கம்பம் வைக்க ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதனை மீறி கொடிக்கம்பம் வைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், உடைக்கப்பட்ட ஜேசிபி(JCB) இயந்திரத்தின் கண்ணாடியின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் எனவும், 55 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "அவ்வளவு உயரத்தில் வைப்பது முட்டாள்தனமானது. அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்று யாருக்குத் தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், காக்கா குருவி உட்காரவே பயன்படும் எனக் கூறியபோது நீதிமன்றத்தில் சிரிப்பலைகள் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய நீதிபதி, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்றும், அவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறு பேரும், இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக, அதன் உரிமையாளருக்கு ஆறு பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 12 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அரசிடம் அனுமதி பெறாமல் இனி கொடிக்கம்பம் அமைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.