சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது பேச்சு குறித்து சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதிப் பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து வழக்கைத் தள்ளி வைத்தார்.
இந்த வழக்கு இன்று (அக்.11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குமரகுரு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேற்று (அக். 10) கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மீண்டும் பொதுக்கூட்டம் கூட்டி பகிரங்க மன்னிப்பு கோரியதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை ஏற்ற நீதிபதி, 10 ஆயிரம் ரூபாய்க்கான 2 உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து குமரகுருவுக்கு முன்ஜாமீன் வழங்கினார். மேலும், தொடர்ந்து இதுபோன்ற வழக்குகள் நிறைவு பெற்றால் வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஒத்திவைப்பு!