சென்னை: திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே நெருங்கிய உறவினரும், டிரைவருமான இம்ரான் பாஷா என்பவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது மஸ்தானுக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழப்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தந்தை மஸ்தானின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் டாக்டர் ஹரீஷ் ஷானவாஸ் அளித்த புகாரில், விசாரணை நடத்திய போலீசார், மஸ்தானின் தம்பி கவுஸ் ஆஸாம் பாஷா, டிரைவர் இம்ரான் பாஷா உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கௌஸ் ஆஷாம் பாஷாவின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (மார்ச் 01) தள்ளுபடி செய்த நிலையில், டிரைவர் இம்ரான் பாஷா ஜாமீன் கோரிய மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் மஸ்தான் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரைவர் இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சாமி கும்பிடுவதில் பிரச்னை.! அரிசி, காய்கறிகளை கொட்டி போராட்டம்