சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில். எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, கோயில் தீட்சிதரான நடராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், நந்தவனம் அமைப்பதற்காக நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என சிதம்பரம் கோயில் தீட்சிதர் நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பிலும் மற்றும் தமிழக தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.