சென்னை: சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர் 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு மனு அளித்ததாகவும், ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது விசாரனையில் பள்ளி கல்வித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்தப் பதில் மனுவில், மனுதாரர் கூறும் புகார்கள் ஏற்புடையதல்ல என்று கூறியிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தியதில் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைகளுக்கு சேவையாற்ற முடியும்: முதலமைச்சர்
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று 2018ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும்; பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் தேவராஜனின் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் மூன்றாம் நபராக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து