சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று(ஜூன் 14) அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்தக்குழாய்களில் மூன்று அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர்" என வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், "ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது" என தெரிவிக்கப்பட்டது.
பிறகு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர், " கைது நடவடிக்கை சட்டவிரோதமாக இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கைது சம்பந்தமாக யாருக்கும் எந்த நோட்டீஸும் அளிக்கவில்லை, எனவே உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. மேலும், மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், "நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லையா? என உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. தமிழ்நாடு அரசின் மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர், "இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை என்றால், டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு வந்து பரிசோதிக்கட்டும்" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்கிற அமலாக்கத்துறை வாதத்தை ஏற்க முடியாது என்றும், செந்தில் பாலாஜி தனது சொந்த செலவில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறை தனது மருத்துவக்குழுவை கொண்டு காவேரி மருத்துவமனையில் விசாரணை செய்யலாம் என்றும் கூறிய நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.