ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, தன் மகள் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டி இருப்பதால் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 5ஆம் தேதி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜூலை 25ஆம் தேதி நளினியின் பரோல் மூன்று வாரம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிவரை தன்னுடைய பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி நளினி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்னை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்துவிடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15ஆம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.