சென்னை: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஜூன் 26இல் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கண்பார்வை, நீரழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத் துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத் துறைத் தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு அவ்வப்போது உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பரிசீலிக்கலாம்
பின்னர் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை எனக் கருதினால் வேறு இடத்திற்குப் பரிந்துரை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார். சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், அதைச் சிறைத் துறை பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை