சென்னை : நீட் தேர்வெழுத குறைந்த பட்ச வயது வரம்பு 17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 வயதான மாணவி ஒருவர் தன்னை சிபிஎஸ்இ சார்பில் 12ஆம் வகுப்பு தேர்வெழுத அனுமதித்து விட்டதாகவும், தன்னை நீட் தேர்வெழுதவும் அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவியை நீட் தேர்வெழுத அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா,கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
வழக்கறிஞர் வாதம்
இது குறித்து விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வெழுத டிசம்பர் 31, 2020இன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்று விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை தனி நீதிபதி கணக்கில் கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதுபோன்ற கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார்.
தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாணவரின் அறிவுத் திறனுக்கும் பக்குவத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும், மருத்துவ படிப்பிற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதிர்ச்சி தேவை எனவும், ஒருவரின் அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாதெனவும் வாதிட்டார்.
ஓராண்டு காத்திருக்க நேரிடும்...
மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை எதிர்க்கவில்லை எனவும், மாணவியின் அறிவுத்திறனை கணக்கில் கொண்டு, விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ஏற்கனவே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வயது வரம்பின் காரணமாக நீட் தேர்வெழுத ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்
திரிசங்கு நிலையில் மாணவி
குறைந்தபட்சம் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவ படிப்பில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் வாதிட்டார்.
மனு தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒருவருக்கு நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது என்பதற்காக 18 வயது பூர்த்தி அடையாமல் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியதோடு, தற்போது சம்பந்தப்பட்ட மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதன் தாக்கம் அவரை மன ரீதியாகப் பாதிக்கும் எனத் தெரிவித்து, நீட் தேர்வெழுத அனுமதிக்க கோரி 16 வயது மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை