சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தொடர்புடைய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை, கோயம்பேட்டில் திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு சொந்தமாக வீ கேர் (Vee Care) மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனை உள்ள நிலத்தில் 62 புள்ளி 93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, காலி செய்யும்படி 2011 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கலாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்குவதற்கானது எனவும், அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது எனவும், மனுதாரர் எம்பியாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவரை நிலமற்ற ஏழை அல்ல எனவும் கூறி கலாநிதியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மெட்ரோ பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்து ஒப்படைக்க திமுக எம்பி கலாநிதிக்கு உத்தரவிட்டார். அப்படி காலி செய்யாவிட்டால் அவரை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: வீட்டு மனை பதிவுக்கு புதிய விதிமுறைகள் அமலாகிறது!