சென்னை : கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் செல்வம் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி சமீனா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக காவல்ர்கள் தேடி வந்தனர்.
நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அருண் என்ற கூலிப்படையை சேர்ந்த மற்றொரு கூட்டாளியும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வில்லிவாக்கத்தில் ராஜேஷ் என்ற வழக்கறிஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முருகேசன் என்ற கூலிப்படை தலைவன் தான் செல்வம் கொலை வழக்கிலும் திட்டம் தீட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
திட்டம் தீட்டிய 2 பெண்கள்
கூலிப் படைத் தலைவன் முருகேசன் கைது செய்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர். இருப்பினும் விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி, பிரபல ரவுடியின் மனைவியுடன் தொடர்புகொண்டு திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது.
கூலிப்படை தலைவன் முருகேசன் என்பவருக்கு ரவுடியின் மனைவி உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த கொலை நடத்திருக்கலாம் என காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் கூலிப்படை தலைவன் முருகேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : படியில் பயணம் - கண்டித்ததற்காக பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்!