சென்னை: உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்
மனநல நல்லாதரவு மன்றத் திட்ட தொடக்கவிழா மற்றும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். மனம் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மனம் நல ஆலோசனை இன்றைய காலத்தில் மிகவும் அவசியம். எல்லாம் நோய்களுக்கும் கூட தீர்வு என்கின்ற வகையில் மருத்துவத்துறை பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்பு மாற்றங்கள் மூலம் இன்றைக்கு உலகமே மிகப்பெரிய அளவில் அசத்தலான சாதனைகளை செய்து வருகிறது.
ஆனாலும் கூட, இந்த மனநலம் பாதிப்புக்கு பெரிய அளவிலான தீர்வு உலகத்தில் எல்லா இடங்களிலும் ஏற்பட்டு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியான ஒன்று தான். எனவே, மனநலப் பாதிப்புக்கு உள்ளவர்களை மீட்டு எடுத்து அவர்களைப் பாதுகாப்பது இன்றைக்கு மனித குலத்தின் மிக மிக தேவையான அவசியமான ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் என்பது பெரிய அளவில் இருந்து வருகிறது. மன நலனை எப்படிப்பாதுகாப்பது என்பதற்குப் பல்வேறு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தற்கொலைக்குப் பெண்கள் 90 விழுக்காட்டிற்கும் மேல் பயன்படுத்தும் பொருள், சாணி பவுடர் தான். கடந்த காலங்களில் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருந்தது. தற்போது அனைத்தும் செயற்கையாக வந்துவிட்டது. அது தற்போதைய காலத்தில் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.
எலி பேஸ்ட் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. ஆனால், அது தற்போது உயிரை எடுத்துக்கொண்டு இருக்கிறது. எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால், அவர்களுக்குத் தரக்கூடாது என்ற அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்த இருக்கிறோம். மேலும் வெளியில் கண்ணுக்குத்தெரியும் வகையில் வைக்கக்கூடாது. மறைத்து வைத்து விற்க வேண்டும் என்றும் எங்கள் துறை சார்பில் தெரிவிக்க இருக்கிறோம்.
சாணிபவுடரை தமிழ்நாட்டில் தடை செய்தாலும் வெளி மாநிலங்களில் இருந்து தான் அதிமாக இங்கு இறக்குமதி செய்கிறார்கள். அதனைத்தடுக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனம் திட்டம் மூலம் பயிற்சி பெற்று, பிறகு இந்த திட்டம் மூலம் மற்ற கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்க வேண்டும். சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறோம்.
ரூ.1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை வழங்கி இருக்கிறோம். அதில் 564 மாணவர்கள் அதிக ஆபத்து என்று கருதப்படும் மாணவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறோம். நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வரும்பொழுது கூட மாணவர்கள் தற்கொலையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த திட்டம் மூலம் அவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்க உள்ளோம்.
உலக அளவில் மக்களின் மருத்துவத்திட்டம் புகழ்பெற்று வருகிறது. ரூ.88 லட்சம் மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வீடு தேடிச்சென்று மருத்துவம் அளித்து வருகிறோம். அதேபோல ரூ.1.70 லட்சம் பேருக்குத்தொடர் சிகிச்சைகள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளித்து இருக்கிறோம்.
கிராமங்கள்தோறும் சென்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் எப்படி செயல்பட்டு வருகிறது, மருந்து பெட்டகங்கள் சரியாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது.
அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொள்ள இருக்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் இந்த மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் அவருக்கு பிடித்து, அந்த மாநாட்டில் என்னை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து பேச அழைத்து இருக்கிறார்.
இந்திய அளவில் மருத்துவ கட்டமைப்பில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 161 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய சுகாதார நிலையம் என்ற சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனத்தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு இல்லை என்ற தலைப்பில் வில்லுப்பட்டு நடைபெற்றது. மேலும் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
இதையும் படிங்க:உணவகத்தில் அழுகிய நிலையில் மீன்கள்...வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி