சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 140 வளைய சுற்றுத்தர அமைப்புகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 20ஆயிரம் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக 7 எண்ணம் துணை மின் நிலையங்களும், 872 எண்ணம் மின்மாற்றிகளும் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளன. இது தவிர, கீழ்கண்ட மேம்பாட்டு பணிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்கமானக் கழகத்தால் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலும், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்காக மட்டும் 3ஆயிரத்து 517.50 லட்சம் ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டி செலவிட்டுள்ளது.
இந்த 2022-2023 ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சுமார் 11.45 கி.மீ. தூரத்திற்கு புதிய உயரழுத்த புதைவடங்களும், 21.12 கி.மீ. தூரத்திற்கு புதிய தாழ்வழுத்த புதைவடங்களும் ரூ.455.23 இலட்சம் செலவிலும், 21 எண்ணம் புதிய வளைய சுற்றுத்தர அமைப்புகள் 294 லட்சம் ரூபாய் செலவிலும், 62 எண்ணம் புதிய மின் விநியோக பெட்டிகள் 55.17 லட்சம் ரூபாய் செலவிலுமாக மொத்தம் 804.40 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளன.
சென்னையின் உட்புற மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பில்லர் பெட்டிகளை மழைக்காலங்களில் OFF செய்து வைக்கும் நிலை இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு மழைநீர் தங்கும் தெருக்களில் உள்ள பில்லர் பெட்டிகள் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி முழுவதும் கண்டறியப்பட்டு 100 எண்ணம் பில்லர் பெட்டிகள் தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இதனால், மழைக்காலங்களிலும் பில்லர் பெட்டிகளை OFF செய்யமால் பொதுமக்களுக்கு மின் விநியோகம் தடையின்றி வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும், வடகிழக்கு பருவமழையினை கருத்தில் கொண்டு 19 வகையிலான 4ஆயிரத்து 533 சிறப்பு பராமரிப்பு பணிகள் மத்திய சென்னை மின் பகிர்மான வட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், 10ஆவது மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, 13வது மண்டல குழுத் தலைவர் துரைராஜ், மா.சிவலிங்கராஜன், இயக்குநர் (மின் பகிர்மானம்) மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்