சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயினை துல்லியமாகக் கண்டறியும் அதிநவீன கருவிகள் (NAAT), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதியில் இருந்து வழங்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "2025-க்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்னும் இலக்கினை அடையும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மொபைல் எக்ஸ்ரே (Diagnostic vans) பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
திருச்சி சன்னியாசிப்பட்டியில் 46 NAAT கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் 4 லட்சம் பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு, இதுவரை தமிழ்நாட்டில் 97,000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கின்றனர்.
இந்த 97,000 காசநோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன், ஊட்டச்சத்து மருந்துகள் தரும் திட்டமும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வருகிறது. காசநோய் இல்லா தமிழ்நாடு என்கின்ற இலக்கு, மிகப்பெரிய அளவில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.27.96 லட்சம் செலவில் காசநோய் மூலக்கூறுகள் கண்டறியும் அதிநவீன கருவிகளை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதன்படி, இக்கருவிகளை வாங்கும்பட்சத்தில், 272 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகளை அதிகரிக்க இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வலிநிவாரண மருந்து பயன்பாட்டைத் தடுக்க முடியாது. இதனை தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மருந்துகள் விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கினால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் பெய்த பெருமழையினால் 60க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 100க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் நீக்கப்பட்டு, தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளது. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட மருத்துவக் கட்டமைப்புகளின் பாதிப்புகளை சரிசெய்வதற்கு ரூ.49 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரம்பாவிடம் குறும்புத்தனம் செய்த ரஜினிகாந்த்? இணையத்தில் வெடித்த சர்ச்சை!