இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஜன.9ஆம் தேதி வெளியானப்படம் 'தர்பார்'. இப்படத்தை லைகா நிறுவனம் தயரித்திருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.
இதனையடுத்து இப்படத்திற்கு அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைதளத்தில் ஒருவர் பேசியுள்ளார். இதனால் அவரை கைதுசெய்ய வேண்டும் என லைகா நிறுவனம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்ப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சிவா கூறுகையில், 'தர்பார்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைக் கெடுக்கும் விதமாக சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் முழு படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் திருட்டுத்தனமாக வெளியிட்ட திரைப்படத்தின் கீழ் ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் யாரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வேண்டாம் எனவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்து லைகா நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்படி பேசியுள்ளார்.
இந்த ஆடியோவை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பின்னர் திருட்டுத்தனமாக படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடும் திரையரங்குகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபரை கண்டுபிடித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு லைகா நிறுவனம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய லைகா நிறுவனத்தின் செயல் அதிகாரி கண்ணன் இந்த திரைப்படத்தை யாரும் இணையதளத்தில் பார்க்க கூடாது என்றும் அதே போல் வெளிவந்துள்ள ஆடியோவை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.