சென்னை: நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்குத் திசையில், தமிழ்நாடு, புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அநேக இடங்களிலும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
கனமழையினை பொறுத்தவரை 9,10ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 11,12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையினைப்பொறுத்தவரையில் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்தப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனவே, மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்குச்செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் 10ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதியில் கனமழையும், 11, 12ஆம் தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கனமுதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஒரு சில பகுதியில் கனமழையும் பெய்யக்கூடும். புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. கரையை ஒட்டி வரக்கூடும் என்பதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை(09/11/2022) தமிழ்நாட்டில் 23.7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பளவு 24.3 செ.மீ., இது இயல்பை விட இரண்டு சதவீதம் குறைவு. ஆனால், சென்னையில் இந்த காலகட்டத்தில் 46 சென்டிமீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பளவு 40.5 சென்டிமீட்டர் இது இயல்பை விட 13 விழுக்காடு கூடுதலாகும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோதப்பணி நியமனம்; பொதுப்பணித்துறைச்செயலர் ஆஜராக உத்தரவு!