சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து போக்குவரத்து துறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், இப்பேருந்துகளை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக பேருந்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் 'பிங்க்' நிற வண்ணம் அடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேருந்து வழித்தடங்களில் எந்தெந்த பேருந்துகள் வர இருக்கின்றனர் என தெரிவிக்கக் கூடிய 'சென்னை பஸ்' என்ற செயலியை போக்குவரத்து துறை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வகையில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட 150 பேருந்துகளின் சேவையை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள 6 ஒலிபெருக்கிகள் மூலம் பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 100 மீட்டருக்கு முன்பாக நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படும்.
விளம்பர ஒலிபரப்பு மூலம் வருவாய்:இடை இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு அதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 602 வழித்தடங்களில் 3,100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. அவற்றில் 150 பேருந்துகளில் பணி முடிந்த நிலையில் பேருந்து நிறுத்த தகவலை பயணிகளுக்கு வழங்கும் வகையில் புதிய வசதியுடன் இன்று (நவ.26)முதல் அப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் 1000 சென்னை மாநகர பேருந்தில் ஒலிபெருக்கிகள் பொருத்துவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரும் பணி நிறைவடைய உள்ளது என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பேருந்துகளில் பயணிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயனடைய கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு, அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோருடன் இணைந்து சென்னை மாநகர் பேருந்தில் பயணம் செய்தார். பேருந்து சேவையை தொடங்கி வைத்து பல்லவன் இல்லத்திலிருந்து பாரிமுனை, அண்ணா சதுக்கம் வரை 15 நிமிடங்கள் பேருந்தில் பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீண்ட நாள்களுக்கு பின் பேருந்தில் பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளை பயணிகளுக்கு வழங்கும் வகையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்துகளின் சேவை நல்ல முன்னெடுப்பு. அனைத்து பேருந்துகளிலும் இந்த சேவையை கொண்டு வர போக்குவரத்து துறை முயற்சி செய்யும். வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயணுள்ளதாக இருக்கும். நான் அமைச்சராவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்" என கூறினார்.
இதையும் படிங்க:பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்