தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கள் கடந்த டிச.9ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான ஆய்வு நாளை தொடங்க உள்ள நிலையில், ஏற்கப்படும் வேட்பு மனுக்கள், ரத்து செய்யப்படும் வேட்பு மனுக்கள் உள்ளிட்ட விவரங்களும், நாளை மாலையே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.
வேட்பாளர்கள் ஏற்கப்பட்ட தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் டிச.19ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக டிச.27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிச.30ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி, அன்றே வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களின் முதல் கூட்டம், பதவி ஏற்பு உள்ளிட்டவை ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் திருட்டு - திருவாரூர் அருகே பரபரப்பு