தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஊரகப் பகுதிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி 11,30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இவற்றில் 27 மாவட்டங்களில் மட்டுமே ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
மீதமுள்ள 9 மாவட்டங்களில் வார்டுகள் வரையறை பணிகள் முடிவடையாததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் நகர்ப்புற பகுதிகள், விடுபட்ட 9 மாவட்டங்கள் ஆகியவற்றிற்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 9 மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யும் பணிகள் தாமதமானதால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பலமுறை அடுத்தகட்ட தேர்தல்கள் தொடர்பாகவும், வார்டுகள் வரையறை பணிகள் தொடர்பாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் தொடர் கூட்டங்களை நடத்தி தேர்தலுக்குத் தயார்படுத்தி வந்தார்.
இந்நிலையில், வரவுள்ள ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான (ஊரகம் மற்றும் நகர்ப்புற) தேர்தலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்!