சென்னை : ஓட்டேரியை சேர்ந்தவர் சிவகுமார்(36). இவர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் (man power)பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிவகுமார் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு கோயம்பேட்டை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் கடனை பெற்றுக் கொண்ட சிவகுமார், பணத்தை திருப்பி தராமலும்,அதற்கு வட்டி கட்டாமலும் தெய்வசிகாமணி தொடர்பை துண்டித்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தெய்வசிகாமணி சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வள்ளுவர் கோட்டம் வரும்படி கூறியுள்ளார்.
சிவக்குமார் வருவதற்கு முன் தெய்வசிகாமணி காரில் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் தயாராக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமாரை காரில் வலுக்கட்டாயமாக அமர வைத்து அங்கிருந்து அவரின் கையும்,காலையும் பிடித்து கடத்தி சென்றுள்ளனர்.
கார் லயோலா கல்லூரி அருகே சுரங்கபாதையில் சென்றபோது சிவகுமார், காரின் கண்ணாடி இறக்கி கத்தி உள்ளார் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் தெய்வசிகாமணி மற்றும் சிவகுமார் ஆகியோரை போலீசார் சூளைமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் வாங்கிய நபர் கடனை திருப்பி தராததால் கடன் வாங்கியவரை அடியார்களுடன் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.