Chennai Metro: சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒ பிராண்டிங் நிறுவனத்துடன் இணைந்து "மெட்ரோ இன்னிசை நிகழ்ச்சி 2023"-ஐ நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், வரும் 21, 22ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், அதற்கான நுழைவுச்சீட்டு, பயண அட்டையாக வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ரக்சிதாவின் இன்னிசை நிகழ்ச்சியும், 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு, தாய்க்குடம் பிரிட்ஜ் கலைக்குழுவின் பல்சுவை இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இவற்றிற்கு நுழைவுக் கட்டணமாக 550 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
550 ரூபாய் செலுத்தி இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை பயண அட்டையாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த அட்டையை மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ரீசார்ஜ் செய்து மெட்ரோ பயண அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை மெட்ரோ பயண அட்டையாக பயன்படுத்துவோருக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டு பயண அட்டையை புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல், கோயம்பேடு, திருமங்கலம், ஆயிரம் விளக்கு, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் நுழைவுச்சீட்டு பயண அட்டையை ஆன்லைனில் paytm insider-லும் பெற்றுக் கொள்ளலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்"