கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கைகொடுப்போம் என்றும்; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம் என்றும் முதலமைச்சர் அறிக்கை மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி கிடைக்கிறது’ என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, மக்கள் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதர் அங்காடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கிவருகிறது. தமிழ்நாடு அரசு, கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரவித்துள்ளார்.