சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் திண்டுக்கல் லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு பெரும் பொறுப்பைக் கொடுத்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் காலையில் வந்து என்னை இந்த இருக்கையில் அமரச்செய்து விட்டுச் சென்றுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தேன். தற்போது மீண்டும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தும் புத்தகங்களை தயாரித்து வழங்கும் பணியை முதலமைச்சர் அளித்துள்ளார்.
பாடப்புத்தகங்களில் கருணாநிதி
ஆசிரியர் பணியில் 33 ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்துடன், மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். மாணவர்கள் எளிமையான பாடங்களை கற்றுக்கொண்டு பின்னர் கடினமான பாடங்களை கற்கும் வகையில் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்படும்.
நான் 11ஆம் வகுப்பு படிக்கும்பொழுது முதல் பாடத்தில் அண்ணாவின் பட்டமளிப்பு விழாவின் பேரூரையை வைத்திருந்தனர். அதனை ஆசிரியர் நடத்திய விதம் இன்றும் எனது மனதில் பதிந்துள்ளது.
வருங்காலத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கருணாநிதியின் எழுத்துப்பணி, அரசியலுக்கு வந்த பின்னர் அவர் பொது மக்களுக்கு ஆற்றிய பணிகள், கவிதைப் பணி ஆகியவற்றை தொகுத்து 1-12ஆம் வகுப்பு வரை பாடநூல் வழியே மாணவர்கள் தெரிந்துகொள்ள முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கருணாநிதி குறித்த தகவல்கள் நீக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூலில் முதல் பக்கத்தில் இருந்த கருணாநிதி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டன. கடந்த காலத்தில் அரசியலாக அதனை ஆட்சியாளர்கள் பார்த்ததால் நீக்கினர். பாடநூல் கழகம் அரசியல் செய்யும் இடம் இல்லை.
நடப்பு கல்வியாண்டு முதல் பெறுவதற்குரிய பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. எனவே, வரும் ஆண்டுகளில் கருணாநிதி வாழ்க்கை குறித்த பாடங்கள் முதலமைச்சரின் ஆலோசனைப்படி பாடங்களில் வைக்கப்படும்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஒன்றிய அமைச்சரைப் பார்த்து வலியுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத் தேவையான தமிழ் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொடுக்கும் பணியும் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'பெண்களின் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி' - முதலமைச்சர் ஸ்டாலினின் ’மலாலா தின’ பதிவு