சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிலம்பரசன். இவர் நேற்று (செப். 26) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது உடன் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் தொடர்பில், ஜான்சன் என்பவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
இவர் சென்னை குரோம்பேட்டையில் 'நிமிர்' என்னும் ஐஏஎஸ் அகாதமி ஒன்றை நடத்திவருகிறார். இவர் மூலம் அண்ணாநகரில் 'அக்னி' என்னும் ஐஏஎஸ் அகாதமி நடத்தும் சிவக்குமாரும், சிலம்பரசனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அவருக்கு அரசியல்வாதிகளும், அரசு உயர் அலுவலர்களும் அதிகம் பேரைத் தெரியும் என சிலம்பரசனிடம், ஜான்சன் கூறியுள்ளார்.
போலி நியமன ஆணை வழங்கல்
மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிவக்குமார் நெருக்கமான நண்பர் எனக் கூறி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சிலம்பரசனிடம் காட்டியுள்ளனர். அப்போது உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக சிலம்பரசனுக்கு ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சிலம்பரசனும், 2019ஆம் ஆண்டு மூன்று லட்சம் ரூபாயை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் மூன்று மாதங்கள் கழித்து உதவி கல்வி அலுவலர் பணி காலியாக இருப்பதாகவும், கூடுதலாக ஏழு லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய சிலம்பரசனும் கூடுதல் பணத்தைக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிலம்பரசனுக்கு உதவி கல்வி அலுவலர் பணி ஒதுக்கப்பட்டது போன்ற போலி நியமன ஆணை ஒன்றை சிவக்குமார் வழங்கியுள்ளார்.
இருப்பினும் நீண்ட நாள்களாகியும் அந்தப் பணி நியமன ஆணையின் மூலம் பணியில் சேர முடியாததால், சிலம்பரசன்தான் கொடுத்த பணத்தை இருவரிடமும் திருப்பிக் கேட்டுள்ளார்.
நால்வர் மீது வழக்குப் பதிவு
இதனைத் தொடர்ந்து பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி, இருவரும் தொடர்ந்து ஏமாற்றிவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே தற்போது சிலம்பரசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் இவர்கள் மட்டுமல்லாது, மனோஜ், ரஞ்சித் என்ற மேலும் இரண்டு தரகர்களும் பலரிடம் பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் ஐஏஎஸ் அகாதமி உரிமையாளர்கள் உள்பட நால்வர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இவர்கள் இதுபோன்று இன்னும் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர்? உண்மையிலேயே அரசு அலுவலர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் இவர்களுக்கு தொடர்பிருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மோசடியில் ஈடுபட்ட நால்வரும் விரைவில் கைதுசெய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இந்தியப் பெண் விமானப்படை அலுவலருக்குப் பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அலுவலர் கைது